உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல, பொறுப்புணர்வுடனும் பரஸ்பர பரிவுடனும் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே ஆகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஜூலை 19ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தின் “ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருது விழாவில்” முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைப் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் சிறுமிகளின் ஒழுக்கம், நேர்மை மற்றும் சேவை அர்ப்பணிப்பைப் பாராட்டி 338 ஜனாதிபதி விருதுகளும், 12 பிரதமர் விருதுகளும் உள்ளடங்கலாக மொத்தம் 350 விருதுகளைப் பிரதமர் பெண் பிள்ளைகளுக்கு வழங்கி வைத்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர், ஒழுக்கநெறியும் சமூகப் பொறுப்புணர்வும் கொண்ட பிரஜைகளை உருவாக்குவதில் பெண்கள் சாரணர் இயக்கத்தின் பங்களிப்பைப் பாராட்டியதுடன், சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இளம் தலைவிகள் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். இந்நிகழ்வில் இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தின் தலைவி ஸ்வர்ணிகா பிடிகல உட்பட உயர் அதிகாரிகள், விருது பெற்ற சாரணர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
