நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேன மற்றும் குருவிட்ட ஆகிய ஐந்து சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மையால் 255 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) நடைபெற்ற “ரட்டாம ஏகட்ட” தேசிய செயல்பாட்டு பேரவை கூட்டத்தில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.
சிறைச்சாலைகளில் கைதிகள் தொடர்பான வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்காக உளவியல் மற்றும் மனநல சேவைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இதனிடையே, பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையைத் தடுக்கும் வகையில் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகளால் இணைந்து முன்னெடுக்கப்படும் “மிதுரு பாடசாலை” திட்டத்தின் முன்னேற்றமும் ஆராயப்பட்டது.
போதைப்பொருள் அதிக ஆபத்துள்ள மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு இலக்கு வைக்கப்பட்ட திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் சிறுவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பது தொடர்பான கவலையும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
போதைப்பொருள் தடுப்பு, ஆரம்பகட்ட அடையாளம் காணல், புனர்வாழ்வு, சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள், மீள்பாவனை தடுப்பு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட ஆறு அம்சங்களைக் கொண்ட தேசிய மூலோபாயத்தின் முன்னேற்றமும் பரிசீலிக்கப்பட்டது.
