22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்க்கட்சியினர் மற்றும் மகாநாயக்க தேரர்களின் நிலைப்பாடு தொடர்பில், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்த குற்றச்சாட்டை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாவட்ட உறுப்பினர் தம்மிக்க செல்லகே முற்றிலும் நிராகரிப்பதுடன், மகாநாயக்க தேரர்கள் மீது என்ன வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன? என்றும் கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் உள்ள சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை அரசாங்கம் அலட்சியப்படுத்தியுள்ளது. குறைந்தபட்சம் கடிதம் கிடைத்தது என்ற தகவலைக் கூடத் தெரிவிக்காமல் மதத் தலைவர்களுக்குரிய மரியாதையை அரசாங்கம் குறைத்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்படாத ஒரு விடயத்தை அரசாங்கம் மக்கள் மீது தன்னிச்சையாகத் திணிக்க முயல்வதுடன், வழக்கம்போல அவசரப்பட்டு வர்த்தமானியை வெளியிட்டு பின்னர் பின்வாங்குவது போல, சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு இன்னும் 24 மணிநேரத்திற்குள் இந்தத் திருத்தத்தை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும்.
நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாலேயே எதிர்க்கட்சியினர் இதை எதிர்ப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறிய குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுப்பதுடன், “அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்த்து கடிதம் எழுதிய மகாநாயக்க தேரர்கள் மீது என்ன வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன?”
அரசின் பொய்களையும் இயலாமையையும் மூடி மறைக்கவே இத்தகைய வீண் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும், அரசாங்கம் உடனடியாக நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதை நிறுத்திவிட்டு இந்த 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். அவ்வாறு செய்யத் தவறினால் வழக்கறிஞர்களும் பொதுமக்களும் இணைந்து தீவிர வீதிப் போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
