சமூக ஊடகங்கள் ஊடாக காணொளி ஒன்றின் மூலம் ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி, உறுதிப்படுத்தப்படாத போலித் தகவல்களை வெளியிட்ட நபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (18) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அக்கராயன்குளம்- பளை பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடாத்தப்பட்டு வருவதாகச் சமூக ஊடகங்கள் வாயிலாகவும், ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தியும் உறுதிப்படுத்தப்படாத போலித் தகவல்களைப் பரப்பியமை தொடர்பிலேயே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெல்லன்வில – பொரலஸ்கமுவை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவராவார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று (19) புதன்கிழமை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், அவருக்கு எதிராக இலங்கை தண்டனைச் சட்டக்கோவை மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
