நாடு தழுவிய ரீதியில் அனைத்து வகையான டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்புப் பணிகளிலிருந்தும் இன்றைய தினம் (20) முதல் விலகுவதற்கு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுகாதார அலுவலகத்தின் சிரேஷ்ட சுகாதார வைத்திய அதிகாரியை தன்னிச்சையான முறையில் இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் புதன்கிழமை (19) இரவு கூடிய தமது சங்கத்தின் செயற்குழு கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சமிந்த முத்துக்குட தெரிவித்துள்ளார்.
அத்துடன், இச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை (21) நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடவுள்ளதாக சமிந்த முத்துக்குட மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கடிதமும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
