அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, ஜனாதிபதியின் தன்னிச்சையான தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் 175 நாட்களுக்கும் மேலாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, அவருக்கு நீதி கோரி பொதுமக்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்று இன்று (20) வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
சலேவுக்கு ஆதரவளிக்கும் ஓரா குழுவினரால் இந்த மகஜர் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய கவனம் செலுத்தி, அவருக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரி இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்துகளுடன் கூடிய இந்த மகஜர், சலேவின் தடுப்புக்காவல் தொடர்பான கவலையை சர்வதேச மட்டத்தில் எடுத்துரைக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகஜர் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
