உலகளவில் வைரலான ‘கட்சி சேரா’, ‘ஆச கூட’ பாடல்களைத் தொடர்ந்து, இளம் இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கர் தனது புதிய இண்டீ சிங்கிளான ‘ரதிமா’வை வெளியிட்டுள்ளார்.
திங்க் மியூசிக் நிறுவனத்தின் ‘திங்க் இண்டீ’ லேபிளில் வெளியாகியுள்ள இப்பாடல், காதல் தோல்வியை சோகமாக அணுகாமல், அழகான நினைவுகளுடன் காதலை ஏற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நடன இசையுடன் கவாலி இசை பாணியையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘ரதிமா’ பாடலின் இசை வீடியோவில், ‘காந்தா’ பட புகழ் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே கதாநாயகியாக நடித்துள்ளார். அவருடன் சாய் அபயங்கரும் நடித்துள்ளார்.
பாடலுக்கு சாய் அபயங்கர் இசையமைத்து, பாடி, தயாரித்துள்ளார். பாடலாசிரியர் விவேக் வரிகளை எழுதியுள்ள நிலையில், தேஜோ பரத்வாஜ் இயக்கியுள்ளார். ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ புகழ் ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
‘ரதிமா’ பாடலின் துள்ளலான இசையும் கவர்ச்சிகரமான ஹூக் ஸ்டெப்பும் இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சாய் அபயங்கரின் 6-வது தனி இண்டீ பாடலாக இது வெளியாகியுள்ளது.
