நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு பெண் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிவான் பீட்டர் போல் நேற்று (25) உத்தரவிட்டார்.
ஹட்டன் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி லலிதா மற்றும் டிக்கோயாவை சேர்ந்த 32 வயதுடைய விஸ்வநாதன் துஷாதரணி ஆகிய இருவருமே இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண் என்பதால் அவரது சுகாதார நிலையைக் கருத்திற்கொண்டு ஏதேனும் பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களைப் பிணையில் விடுவிக்குமாறு சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
எனினும், இதற்கு கடும் ஆட்சேபனை வெளியிட்ட ஹட்டன் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ஆரம்ப கட்ட விசாரணைகளின் படி மோசடி செய்யப்பட்ட தொகை 250 இலட்சம் ரூபாவையும் கடந்துள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.
மேலும், நோர்வூட் பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்படும் கணக்காய்வு நடவடிக்கைகள் இன்னும் நிறைவடைய வில்லை ஆகையால் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் என நீதிமன்றத்தில் கோரியிருந்தனர். மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சாட்ச்சியங்களையும் பரிசீலித்த நீதிவான், சந்தேகநபர்களை செப்டம்பர் 8 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
