‘டிட்வா’ சூறாவளியால் சேதமடைந்த 18 மாவட்டங்களைச் சேர்ந்த 290 சிறு நீர்ப்பாசனக் குளங்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய, காணி, நீர்ப்பாசன மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
உலக வங்கியின் நிதியுதவியுடன், 2029ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த கிராம–நகர அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் திட்டத்தின் கீழ் இந்தப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்காக 5,800 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவசரகால அமுலாக்கல் அங்கத்தின் ஊடாக ‘டிட்வா’ சூறாவளியால் சேதமடைந்த 290 குளங்களை புனரமைக்க 5,578.3 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி, பதுளையில் 97 குளங்களும், இரத்தினபுரியில் 29, மன்னாரில் 24, குருநாகலில் 19, கண்டி மற்றும் வவுனியாவில் தலா 15 குளங்களும் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மேலும் 6 சிறு நீர்ப்பாசனக் குளங்கள் சுமார் 256.17 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
அதிக மழை, வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற காலநிலை பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்கவும், குளங்களின் நீர்த்தேக்க திறனை அதிகரிக்கவும் இந்தப் புனரமைப்புத் திட்டம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
