களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே இடம்பெற்ற ரயில் விபத்துத் தளத்திலிருந்து கழற்றப்பட்ட தண்டவாளப் பாகங்கள் 3,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை கொள்வனவு செய்த நபரின் அடையாளம் கண்டறியப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாண வடக்கிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
வனவாசல பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்துத் தொடர்பில் தற்போதைய நிலைமைகளை விளக்குவதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.
விபத்து நடந்த இடத்தில் தண்டவாள ஆணிகளைக் கழற்றினார் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று சனிக்கிழமை (16) கைது செய்யப்பட்ட 25 வயதுடைய இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
குறித்த நபர் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
இந்தச் சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில், திருடப்பட்ட அரச சொத்துக்களை வாங்கிய நபரை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மட்டுமன்றி, இந்த விபத்தினால் ஏற்பட்ட ஏனைய நட்டங்கள் மற்றும் பாதிப்புகளுக்காகவும் இவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தண்டவாளப் பாகங்களை கழற்றி விற்பதன் மூலம் கிடைக்கும் பண மதிப்பு மிகக் குறைவானது என்ற போதிலும், அதனால் ஏற்படும் ஒட்டுமொத்த பொதுச் சொத்துச் சேதங்கள் மில்லியன் கணக்கிலானது என பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
திருடப்பட்ட பொதுச் சொத்துக்கள் என்று தெரிந்தே அவற்றை வாங்குபவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார். திருடுவது மற்றும் திருட்டுப் பொருட்களை வைத்திருப்பது ஆகிய இரண்டுமே தண்டனைக்குரிய குற்றங்களாகும். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
