மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்படும் எலும்புக்கூடுகள் யாருடையவை என்பதை அறிவியல் ரீதியாக அடையாளம் காணவும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) நினைவுகூரப்பட்ட நிலையில், இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் குறித்து நீதி நிலைநாட்டப்படவேண்டியதன் அவசியம் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் இடம்பெற்ற நீண்டகால ஆயுதமோதலின் இறுதிக்கட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள், இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் அல்லது அரச படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர் காணாமல்போனவர்கள் தொடர்பான உண்மையை வெளிக்கொணர்வது இனியும் தாமதிக்கமுடியாத அவசரக் கடமையாகும்.
ஏற்கனவே கிடைக்கப்பெற்ற ஆவணங்கள், சர்வதேச அமைப்புக்களின் பதிவுகள், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திடம் உள்ள தரவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், இறுதிக்கட்டப் போருடன் தொடர்புடைய விதத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,000ஐ விட உயர்வாக இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிடுவது நீதிக்கான தேடலில் இன்றியமையாத முதற்படியாகும். இந்தச் செயன்முறை இக்குற்றங்களுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளைக் கண்டறிவதற்கும், குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கும், நீதித்துறைசார் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும், குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்களுக்கான இறுதி மரியாதையைக் கண்ணியமான முறையில் செய்வதற்குமான முதற்படியாக அமையும்.
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பெயர்கள், அவர்கள் காணாமல்போன அல்லது கைதுசெய்யப்பட்ட திகதிகள், சரணடைந்த இடங்கள், அவர்கள் கடைசியாக அவதானிக்கப்பட்ட இடங்கள், இரத்த உறவினர்களின் தொடர்பு விபரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட, சரிபார்க்கக்கூடிய தரவுத்தளமாக உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.
மனிதப் புதைகுழிகளில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பதில் இனியும் தாமதம் நிலவக்கூடாது என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
