ஜனாதிபதி வழக்கு தீர்ப்புகளை அறிவித்து, எங்களை பயமுறுத்த முயற்சிக்கிறார். ஜனாதிபதி என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் அரசாங்கத்தின் மோசடிகளை மறைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கொழும்பு துறைமுக நகரம் நிர்மாணிக்கப்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், தற்போதை அதனை முன்னேற்ற முயற்சிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளவே கொழும்பு துறைமுகம் அமைக்கப்பட்டது.
அதற்கு தேவையான கொள்கைகளையும் அரசாங்கம் அமைக்க வேண்டும். மாறாக அரசாங்கம் இந்த திட்டத்தின் கொள்கைகளை மாற்றுவதன் மூலம், முதலீட்டாளர்களை கொண்டுவர முடியாமல் போய்விடும்.
தற்போது மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக முதலீட்டாளர்கள் புதிய சந்தைகளை தேடிவருகின்றனர்.அதற்கு முகம்கொடுக்க நாங்கள் தயாரா? அந்த முதலீட்டாளர்கள் கொழும்பு துறைமுகத்துக்குவந்து முதலீடு செய்ய முடியுமான வகையில் நாங்கள் கொழும்பு துறைமுகத்தை தயார்படுத்தி இருக்கிறோமா? அதன் தேவைப்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் கொஞ்சமாவது புரிந்து வைத்திருக்கின்றதா? அதனால் மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக முதலீட்டார்கள் புதிய முதலீட்டு நிலையமான கொழும்பு துறைமுகத்தக்கு வந்து சுதந்திரமான முறையில் முதலீடு செய்ய முடியுமான வசதிகளை அரசாங்கம் செய்திருக்கிறதா? அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அரசாங்கத்தின் எந்த முயற்சிகளையும் நாங்கள் காண்பதில்லை.
அதேநேரம் அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. ஆனால் இன்று வங்கி ஒன்றில் 13பில்லியன் ரூபா காணாமல் போயுள்ளது. வங்கி ஒன்றில் ஒருவர் 10 இலட்சம் ரூபா பணம் வைப்பிலிடச் சென்றால், அவரிடம் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஆனால் 13 பில்லியன் ரூபா காணாமல் போகும்வரைக்கும் நிதி அமைச்சு,அரசாங்கம், மத்திய வங்கி தூங்கிக் கொண்டிருந்தா? அரசாங்கத்துக்கு ஒன்றும் தெரியாது.
அதேபோன்று திறைசேரியிலிரிந்து தவணை கொடுப்பனவாக 80 கோடி ரூபா, 10 தடவைகள் தவறான கணக்கிற்கு அரசாங்கம் செலுத்தி இருக்கிறது. தவறு இடம்பெறுவதாக அரச தரப்பு உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார். அவ்வாறு தவறு இடம்பெற்றால், நன்றாகத்தான் அரசாங்கம் செய்ய முடியும்.
முழு நாட்டையும் டிஜிட்டல் மயமாக்குவதாகவே தெரிவிக்கிறார்கள். ஆனால் மின்னஞ்சலை வாசித்து தங்களின் வங்கிக் கணக்கை பதிவிட தெரியாமல் இருக்கிறார்கள். மத்திய வங்கி அறிவுறுத்திய பின்னரும் செலுத்தி இருக்கிறார்கள். அதனால் இந்த பணத்துக்கு தற்போது யார் பொறுப்புக்கூறுகிறார்கள்.?
அதேபோன்று அரசாங்கம் வெளிப்படைத்தன்மை தொடர்பில் கதைக்கிறார்கள்.ஆனால் தபால் திணைக்களத்தின் 6இலட்சம் டொரை தவறான வங்கி கணக்கிற்கு செலுத்தி இருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து இந்த தவறு இடம்பெறுமாக இருந்தால், இதனை திட்டமிட்ட நடவடிக்கை என ஏன் தெரிவிக்க முடியாது? இது தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன? ஆனால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதனை மறைப்பதற்கே முயற்சித்தது. இந்த மோசடி ஜனவரி மாதத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஜனாதிபதி இதனை அறிந்திருக்கிறார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
நிலக்கரி கொள்வனவில் மோசடி இடம்பெறவில்லை என தெரிவிக்கிறார்கள். இவ்வாறு தெரிவிப்பது தொடர்பில் வெட்கப்படுகிறோம். அத்துடன் உலகில் அதிக பணம் செலுத்தி எரிபொருள் பெற்றுக்கொண்ட நாடாக இலங்கை பெயரிடப்பட்டிருக்கிறது. இறுதியில் இந்த நட்டத்தை நாட்டு மக்களிடமே அறவிட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது அரசாங்கம் பிரதேச செயலங்களில் அரசாங்கத்தின் ஹெக்கர் ஒருவரை நியமித்து வருகிறது. பிரதேச செயலாளர்கள் இதுதொடர்பில் எதிர்ப்பு தெரிவித்தும் அரசாங்கம் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துவருகிறது.
மேலும் யாழ்ப்பாண மீனவரான கஜேந்திரன் , இலங்கை கடல் எல்லைக்குள் இருந்து இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டு, அவர் இந்தியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டார். தற்போதும் சென்னையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். வெளிவிவகார அமைச்சர் இதுதொடர்பில் இராஜதந்திர ரீதியில் தலையீடு செய்ய வேண்டும். வடக்கு மக்கள் தொடர்பில் கதைக்கும் அரசாங்கம் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. அதேநேரம் வழக்கு தீர்ப்புகளை தெரிவித்து அரசாங்கத்தின் மோசடிகளை மறைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிப்பதில்லை என்பதை ஜனாதிபதிக்கு தெரிவித்துக்கொள்கிறோம் குறிப்பிட்டார்.
