பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனைகளின்போது, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 252 சாரதிகளில் 7 பேர் ஆபத்தான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வீதி பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்காகக் கொண்டு இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பொதுப் போக்குவரத்து சேவை ஊழியர்களிடையே போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதுடன், வீதிகளில் ஒழுக்கத்தையும் ஒழுங்கையும் மீள நிலைநாட்டுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த வைத்தியர் கே.கே. ஜோசப் தலைமையிலான குழுவினரால், நிறுவனத்தின் நடமாடும் ஆய்வகப் பேருந்தைப் பயன்படுத்தி இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வீதிப் போக்குவரத்து விபத்துக்களைக் குறைத்து, ஒழுக்கமான மற்றும் போதைப்பொருள் பாவனையற்ற பணியாளர்களை உறுதி செய்வதன் மூலம் பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து அமைச்சு, இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஆகியவற்றின் முழுமையான ஆதரவுடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
போதைப்பொருள் பயன்படுத்தியதாக அடையாளம் காணப்படும் சாரதிகளுக்கு நிறுவன விதிமுறைகளின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்கப்படுவதுடன், நாட்டின் பொதுச் சட்டத்தின் கீழும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
