தலைமன்னார் கடற்பரப்பிற்கு அருகே அமைந்துள்ள ஒதுக்குப்புறமான மணல் திட்டில் தவித்துக் கொண்டிருந்த 17 வயது இளைஞரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளையின் ‘SLNS தம்மன்னா’ முகாமில் உள்ள கடற்படையினர் வழமையான கடல்சார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது குறித்த மணல் திட்டில் இருந்த இளைஞரைக் கண்டு மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இளைஞருக்குத் தேவையான குடிநீர் உணவு மற்றும் தற்காலிக இருப்பிடம் போன்ற வசதிகளைக் கடற்படையினர் உடனடியாக வழங்கினர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அந்த இளைஞர் தென்னிந்தியாவில் இருந்து கடல் வழியே பயணம் செய்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
முதலுதவிகளுக்குப் பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அந்த இளைஞர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
