இஸ்லாமிய மதத்தை அவமதித்து கருத்து வெளியிட்டதாகக் கூறி பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி.ராகல முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும் குறித்த வழக்கு விசாரணையில் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார் .
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பின்னணியில், அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்குத் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
