தனியார் பாடசாலைகளின் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க இலஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், திராவிட முன்னேற்றக்கழகத்தின் பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சுமார் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணை நிறைவடைந்த பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், அவர்களிடம் இருந்த 295 கேள்விகளில் 246 கேள்விகளைக் கேட்டதாகவும், அதற்குத் தான் விரிவான மற்றும் பொறுமையான பதில்களை அளித்ததாகவும் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
கேள்விகள் இன்னும் மீதமிருப்பதால், அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேடுதலின்போது தனது வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் தான் அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்கள் (Review Meetings) மற்றும் பாதீடு தொடர்பான அறிக்கைகளே தவிர, வழக்குடன் தொடர்புடைய எந்தவொரு சட்டவிரோத ஆவணங்களும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று அவர் குறிப்பிட்டார்.
