நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சிறப்புச் சோதனைகளின் போது, லஞ்ச் சீட் (Lunch Sheets) மற்றும் பொலித்தீன் பைகள் தொடர்பில் 104 விதிமீறல்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டறிந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 15 அன்று 22 மாவட்டங்களை மையப்படுத்தி இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.
இதன்போது,லஞ்ச் சீட் தொடர்பில் 43 விதிமீறல்களும், பொலித்தீன் பைகள் தொடர்பில் 58 மீறல்களும் கண்டறியப்பட்டன.
2019 நவம்பர் 29 திகதியிட்ட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 70 ஆம் இலக்கக் கட்டளை நடைமுறைகளுக்கு அமைவாகவே லஞ்ச் சீட்கள் மற்றும் உணவு சுற்றப்படுபவை (Food wrappers) விற்பனை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவு நடைமுறையில் உள்ளது.
2025 ஒக்டோபர் 01 திகதியிட்ட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளையின் கீழ், பொலித்தீன் பைகளை நுகர்வோருக்கு இலவசமாக வழங்க முடியாது.
அவை விற்பனை செய்யப்பட்டால், அதன் விலை தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது.
