சவூதியில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலைக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுவதாக மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற ஏற்றுமதி விவசாயம் தொடர்பான திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்றுமதி முக்கியமானது. அதில் விவசாயம் மிக முக்கியமானதாக இருக்கின்றது. இலங்கை விவசாயத்தில் தேயிலை நாட்டுக்கு மூன்றாவது வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் துறையாக இருக்கின்றது. சிலோன் டீ என்பது உலகில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில், இதனை ஏற்றுமதி செய்வதற்காக வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் தேயிலையை இங்கு கொண்டுவந்து இங்குள்ள பெயர்பெற்ற தேயிலையுடன் கலந்து அதனை ஏற்றுமதி செய்வதால் இலங்கை தேயிலையின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்படுகின்றது. இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு கோருகின்றேன்.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கோருகின்றேன்.
அத்துடன், ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள கல்வி காரியாலத்துக்கு 67 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் காரியாலயம் ஹட்டனிலிருந்து வெளியில் கொண்டுசெல்லப்பட்டு கினிகத்தேனைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. இது முற்றிலும் தவறான விடயமாகும். அங்கு 130 பெருந்தோட்டப் பாடசாலைகள் இருக்கின்றன. இதனால் அது ஹட்டனிலேயே அமையவேண்டு மென்று கோருகின் றோம்.
