(கனகராஜா சரவணன்)
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் பற்றி அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா , முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கும் அவர்களின் யூடியூப். முகநூல் தளங்களுக்கும் எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் 6 பேரையும் இந்த வழக்கு முடியும் வரை வைத்தியர் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 12ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று திங்கட்கிழமை (28) உத்தரவு பிறப்பித்து கட்டளையிட்டார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார பணி உதவியாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள், ஹிஜாப் உடை அணிவது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இதன் போது வைத்திய பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன் அவரது குடும்பம் தொடர்பாக அவதூறாக சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவிடப்பட்டது.
இந்த அவதூறு தொடர்பாக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் வைத்தியர் கு.சுகுணன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம், மற்றும் அவர்களின் சமூகவலைத்தளங்களுக்கு எதிராக கடந்த திங்கட்கிழமை (21) வழக்கு தாக்கல் செய்தார்.
குறித்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (22) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தரஷ்சினி திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போது, வழக்காளி சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ், மற்றும் கனகலிங்கம் கிசோபனா ஆஜராகிய சமர்பணம் முன்வைத்தனர் இதன்போது குறித்த வழக்கை நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளையை பெறுவதா இல்லையா தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக எதிர்வரும் 28ம் திகதிக்கு நீதவான் வழக்கை திகதியிட்டார்.
குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று திங்கட்கிழமை (28) திறந்த நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போது ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேரையும் வைத்தியர் சுகுணன் பற்றி அவரது குடும்பம் பற்றியோ முகநூல் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த வழக்கு முடியும் வரை பதிவிடுவதற்கு தடைவிதித்து எதிர்வரும் 12ம் திகதி நீதிமன்றில் 6 பேரும் சமூகமளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டு கட்டளையிட்டார்.
