மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் விதுசன் (21 வயது) என்ற இளைஞன், 2021 ஜூன் மாதம் பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை கிழக்கு மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்படவுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.
விதுசனின் மரணம் தொடர்பான வழக்கு இன்று (28) திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில், விதுசனின் குடும்பம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி சுகாஸ் முன்னிலையாகியிருந்தார்.
கடந்த 5 வருடங்களாக பொலிஸாருடைய விசாரணைகளில் எந்தவிதமான முன்னேற்றகரமான நிலைமையும் இல்லாதிருப்பதை நீதிமன்றத்தினுடைய கவனத்துக்கு கொண்டு வந்து, இந்த வழக்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்றுவது பற்றி பரிசீலிக்குமாறு விண்ணப்பம் செய்திருந்தோம் என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.
நீதிமன்றம் கடந்த தவணையிலேயே இது பற்றி சுயமாக ஆராய்ந்து, கிழக்கு மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினருடைய விசாரணைக்காக இந்த வழக்கை மாற்றுவதற்கு திட்டமிட்டிருந்ததாக அறியத் தந்திருக்கின்றார்கள்.
அந்த வகையில் எதிர்காலத்திலே இந்த வழக்கை கிழக்கு மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரிக்க இருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட விதுஷனுடைய குடும்பத்தோடு சேர்ந்து நாங்களும் நீதிக்காக போராடுவோம், குரல் கொடுப்போம் எனவும் தெரிவித்தர்.
