ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு எதிராக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் புதிய சட்டமூலம் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
Prevention of Organised Crimes Bill எனப்படும் இந்த சட்டமூலம் நேற்று (06) வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது.
முக்கியமான குற்றத்தை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவில் உறுப்பினராக இருப்பது நிரூபிக்கப்பட்டால், 5 முதல் 20 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக 10 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கக்கூடிய வகையில் சட்டமூலத்தில் ஏற்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன.
மேலும், விசாரணைகளின் தேவைக்காக ஒரே தடவையில் இரண்டு மாதங்கள் வரை தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கவும், மொத்தமாக ஒரு வருடம் வரை தடுப்புக்காவலை நீட்டிக்கவும் சட்டமூலம் வழிவகை செய்கிறது.
நீதிமன்ற அனுமதியுடன் டிஜிட்டல் கண்காணிப்பு, தகவல் தொடர்புகளை இடைமறித்தல், இரகசிய நடவடிக்கைகள் மற்றும் மின்னணு சாதனங்களிலிருந்து தரவுகளைப் பெறுதல் போன்ற நடவடிக்கைகளுக்கும் சட்டமூலத்தில் ஏற்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன.
இந்த சட்டமூலம் சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதையும், இலங்கையின் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
