நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவை சந்தித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பெருந்தோட்டப் பகுதிகளில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்களின் குடியிருப்பு மற்றும் காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, பல ஆண்டுகளாக பெருந்தோட்டப் பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு தோட்ட நிர்வாகங்களால் வெளியேற்ற அறிவிப்புகள் வழங்கப்பட்டு, அவர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செந்தில் தொண்டமான் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெருந்தோட்டத் துறையில் பணியாற்றவில்லை என்ற காரணத்தை முன்வைத்து, நீண்டகாலமாக குறித்த பகுதிகளில் வசித்து வரும் குடும்பங்களை அவர்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவது தொடர்பிலும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளால் பல ஆண்டுகளாக பெருந்தோட்டப் பகுதிகளில் வசித்து வரும் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு உரிய தீர்வை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்கும் சட்டப் பாதுகாப்புகள், பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் உரிய முறையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் பெருந்தோட்டப் பகுதிகளில் குடியிருப்புகளுக்காக வழங்கப்பட்ட காணிகளுக்கு எழுத்துமூல ஆவணங்கள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், குறித்த குடியிருப்புகளில் நீண்டகாலமாக வசித்து வருவதை உறுதிப்படுத்தும் மின்சாரப் பட்டியல்கள், வாக்காளர் பட்டியல் பதிவுகள் மற்றும் கிராம உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தல்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பல குடும்பங்களிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பெருந்தோட்டப் பகுதிகளில் வசித்து வரும் மக்களையும், தற்காலிக குடியிருப்புகள் அல்லது கூடாரங்களில் வசித்து வரும் மக்களையும், தற்போது தோட்டத் துறையில் பணியாற்றவில்லை என்ற காரணத்தைக் கூறி வெளியேற்றுவது நியாயமற்றது எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
எனவே, பெருந்தோட்ட மக்களின் நீண்டகால குடியிருப்பு உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்குவதுடன், அவர்களின் காணி மற்றும் குடியிருப்பு பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
