சிறையில் தடுத்து வைக்கப்படும் தேரர்களை கையாளும் முறை மற்றும் அவர்களை சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லும் நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இதற்காக சட்டமா அதிபர் திணைக்களம், நீதி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, புத்தசாசன அமைச்சு மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நடைமுறைகளை இரண்டு வாரங்களுக்குள் ஆய்வு செய்து, தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய விதிமுறைகளை முன்வைக்குமாறு குழுவுக்கு அறிவுறுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலகொடஅத்தே ஞானசார தேரரை சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் மகா சங்கத்தினர் எழுப்பியுள்ள கவலைகள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய நடைமுறைகள் எந்தவொரு தனிநபரையும் இலக்காகக் கொண்டதாக இல்லாமல், அனைத்து தேரர்களுக்கும் பொதுவாக பொருந்தும் வகையில் அமைக்கப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
