இலங்கையின் கம்பீர யானை காவன்திஸ்ஸ உயிரிழப்பு! சோகத்தில் மக்கள்!
இலங்கையின் கம்பீரமான காட்டு யானைகளில் ஒன்றான காவன்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. இந்தச் செய்தி வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் நடமாடி வந்த காவன்திஸ்ஸ யானை, இலங்கையின் உயரமான யானைகளில் ஒன்றாகவும், நீண்ட கொம்புகளைக் கொண்ட யானையாகவும் அறியப்பட்டது.
கல்கமுவைப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு வாழ்ந்து வந்த இந்த யானை, அண்மைக்காலத்தில் பொதுமக்களின் அன்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், யானையின் முன்புற வலது காலில் காணப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயம் காரணமாக அது நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தது.
கடந்த 24ஆம் திகதி முதல் யானைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், இன்று காலை சியம்பலன்கமுவ பிரதேசத்தில் உள்ள வயல்வெளியொன்றில் காவன்திஸ்ஸ யானை ஒருக்களித்த நிலையில் வீழ்ந்து கிடந்துள்ளது.
இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் கால்நடை மருத்துவர்களும் இணைந்து யானைக்குத் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.
எனினும், கடந்த சில நாட்களாகச் சரிவர உணவு உட்கொள்ள முடியாமல் பலவீனமடைந்திருந்த காவன்திஸ்ஸ யானை, சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் போராடிய ஒரு கம்பீரமான காட்டு யானையின் உயிரிழப்பு, வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் மீண்டும் எழுப்பியுள்ளது.
காட்டு யானைகளைப் பாதுகாப்பது நம் அனைவரினதும் பொறுப்பு. வனவிலங்குகளுக்கு எதிரான வன்முறைகளைத் தவிர்த்து, அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்.
