ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி தொலைபேசி செயலிகள் தொடர்பில் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வமற்ற இணையத்தளங்கள், சமூக ஊடக இணைப்புகள், செய்திப் பரிமாற்றத் தளங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலி அங்காடிகள் ஊடாகச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
வட்ஸ்அப், குறுஞ்செய்தி (SMS), மின்னஞ்சல் அல்லது சமூக ஊடகங்கள் வழியாகப் பகிரப்படும் இணைப்புகள் மூலம் தனது செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு வாடிக்கையாளர்களிடம் கோருவதில்லை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும், ஒருமுறை கடவுச்சொற்கள் (OTP), வங்கி அடையாள எண்கள் (PIN) மற்றும் கடன் அட்டை விவரங்கள் உள்ளிட்ட நிதித் தகவல்களையும் நிறுவனம் கோருவதில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, Apple App Store அல்லது Google Play Store ஊடாகச் செயலியைப் பதிவிறக்கம் செய்யும்போது, அதன் வெளியீட்டாளராக SriLankan Airlines Limited குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்குமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், நிறுவனத்தின் உத்தியோகபூர்வ சலுகைகள், விளம்பரங்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் www.srilankan.com, உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி மற்றும் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகக் கணக்குகள் ஊடாகவே வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான செயலிகளை நிறுவவோ, அவற்றில் தனிப்பட்ட அல்லது வங்கித் தகவல்களைப் பகிரவோ வேண்டாம் எனவும், இவ்வாறான மோசடிகள் தொடர்பில் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தொடர்பு வழிகள் ஊடாக முறைப்பாடு செய்யுமாறும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
