கொழும்புத் துறைமுகத்திற்குள் அதிநவீன தளவாட மையமொன்றை பொது-தனியார் பங்களிப்பின் கீழ் மேம்படுத்த இலங்கைத் துறைமுக அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
இலங்கைத் துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘தெற்காசிய வணிக மற்றும் தளவாட மையம்’ என்ற கூட்டு முயற்சியைத் தொடர வேண்டாம் என அதன் பங்குதாரர்கள் ஒருமித்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
சுமார் 280 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில், 150,000 சதுர மீட்டர் பரப்பளவில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த இத்திட்டத்தில், சீனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் 70 சதவீதமும், இலங்கைத் துறைமுக அதிகாரசபை மற்றும் அக்சஸ் இன்ஜினியரிங் பிஎல்சி ஆகியன தலா 15 சதவீதமும் பங்குகளைக் கொண்டிருந்தன.
கைவிடப்பட்ட திட்டத்தில் எஞ்சியுள்ள 29.8 மில்லியன் அமெரிக்க டொலர் பங்களிப்புத் தொகையை, ஒழுங்குமுறைத் தேவைகள் மற்றும் செயல்பாட்டுச் செலவுகளைக் கழித்த பின்னர், பங்குதாரர்களின் பங்களிப்பு விகிதாசாரத்திற்கு ஏற்ப மீளப் பகிர்ந்தளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலாக, முறையான அனுமதிகளைப் பெற்று போட்டி ஏல முறையின் ஊடாகப் புதிய தளவாட மையத்தை உருவாக்குவதற்கான மாற்றுத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த முயற்சியின் மூலம் துறைமுகத்தின் நிலப்பரப்பைச் சிறப்பாகப் பயன்படுத்துதல், தனியார் முதலீடுகளை ஈர்த்தல், சர்வதேச விநியோகச் சங்கிலிச் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் நீண்டகால வருவாயை அதிகரித்தல் ஆகியவற்றை இலங்கைத் துறைமுக அதிகாரசபை இலக்காகக் கொண்டுள்ளது.
