இலங்கை அரசாங்கம் ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தை விமர்சித்திருந்த போதிலும், ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
CNN ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் கடந்தகால அனுபவங்கள் காரணமாகவே தமது கட்சி ஆரம்பத்தில் அந்தத் திட்டம் குறித்து எதிர்ப்புத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தைத் தொடர அரசாங்கம் எடுத்த தீர்மானம் குறித்துக் கேட்கப்பட்டபோது, புதிய நிர்வாகம் ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்ததாகவும், அதனைத் தொடர்வதைத் தவிர வேறு மாற்று வழிகள் இருக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான முந்தைய அனுபவங்கள் திருப்திகரமாக இருக்கவில்லை என்றாலும், புதிய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தபோது அந்த அமைப்புடன் ஆக்கபூர்வமான முறையில் இணைந்து பணியாற்ற முடிந்ததாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, நல்லாட்சி, ஊழல் ஒழிப்பு மற்றும் நிதி ஒழுக்கம் தொடர்பான அரசாங்கத்தின் கவலைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் பல முன்னுரிமைகள் அரசாங்கத்தின் சொந்த இலக்குகளுடன் ஒத்துப்போவதால், அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரான மீட்சி குறித்துப் பேசிய அவர், நாட்டின் பொருளாதார நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிதி முகாமைத்துவம், நிதி ஒழுக்கம், ஊழல் மற்றும் வீண் விரயங்களைக் கட்டுப்படுத்துதல், ஆளுகைச் சீர்திருத்தங்கள் ஆகியவை இந்த முன்னேற்றத்துக்குப் பங்களித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதும் புதிய அரசாங்கத்தின் ஆட்சித் திறனை நிரூபிப்பதும் முக்கிய சவால்களாக இருந்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் தோல்வியடையும் எனப் பலர் எதிர்பார்த்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய நிர்வாகத்தின் கீழ் நாடு முன்னேற்றப் பாதையில் பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
