ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இணையப் பாதுகாப்பு தொடர்பான சர்ச்சை குறித்து இரண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விமான நிறுவனத்தின் இணைய மென்பொருள் மற்றும் மின்னஞ்சல் கட்டமைப்புக்குள் ஊடுருவியதாகவும், அதற்காக 50,000 அமெரிக்க டொலர் பெறுமதியான கிரிப்டோகரன்சி கோரப்பட்டதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
எனினும், தமது தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் ஊடுருவலுக்கு உள்ளாகவில்லை என்றும், நிறுவனத்தின் இணையக் கட்டமைப்பு ஹேக்கர்களின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுத்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் கட்டமைப்புக்கும் உலகளாவிய விமானக் கூட்டணியின் டிஜிட்டல் தளமான கெரியர்கனெக்ட் (CarrierConnect) கட்டமைப்புக்கும் இடையிலான இணைப்பு தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டது. பின்னர் ஆய்வுகள் மற்றும் அதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து அந்த இணைப்பு மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்தச் சம்பவம் உண்மையான இணைய ஊடுருவலா அல்லது அச்சுறுத்தல் மட்டுமா என்பது குறித்து இதுவரை தெளிவான முடிவு எட்டப்படவில்லை எனப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கணினி அவசரகாலத் தயாரிப்புக் குழுவும் (Sri Lanka CERT) இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. அத்துடன், சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கத் தவறியமைக்கான காரணம் குறித்தும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்த இணையப் பாதுகாப்பு விவகாரம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
