வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘ARNAB’ சூறாவளி காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (26) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அடுத்த 12 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவின் மத்திய கிழக்கு மற்றும் அதனை அண்மித்த தென்கிழக்கு பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து ‘ARNAB’ சூறாவளியாக மாறியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு 11.30 மணியளவில் மத்திய மேற்கு வங்காள விரிகுடாவில் மேலும் வலுவடைந்து தீவிர சூறாவளியாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் குறிப்பிட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். அத்துடன், கடல் அலைகள் 3 முதல் 4 மீற்றர் உயரம் வரை எழக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூறாவளி இலங்கையை நேரடியாகப் பாதிக்காது என எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் காற்றுச் சுழற்சியின் தாக்கத்தால் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட அகலாங்கு 10 முதல் 20 வரையிலும், கிழக்கு நெட்டாங்கு 80 முதல் 95 வரையிலும் அமைந்துள்ள கடல் பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த கடல் பகுதிகளில் உள்ள மீனவர்கள் மற்றும் கடற்படையினர் உடனடியாகப் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறும், எதிர்வரும் வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
