நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நீர்ப்பாசனத் திணைக்களம், களு கங்கையின் நீர்மட்டம் மற்றும் நிலவும் வானிலை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுளை, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் எலபாத ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, ஹொரணை, தொடங்கொடை, மில்லனிய, புளத்சிங்ஹள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும், அந்தப் பகுதிகளினூடாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நிலவும் வானிலை மாற்றங்கள் மற்றும் அதிகாரிகளால் வெளியிடப்படும் அனர்த்த எச்சரிக்கைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
