முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக் குறைப்பைச் செல்லாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பராமரிப்புச் செலவுத் தொகையான 17.4 இலட்சம் ரூபாவைச் செலுத்தத் தவறியதற்காக 29 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மொஹமட் அமீன் மொஹமட் நசீம் என்பவருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பில், 2024 செப்டெம்பர் மாதம் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் கீழ் அவருக்குத் தண்டனைக் குறைப்பு வழங்கியமை, அரசியலமைப்பின் 12(1)ஆம் உறுப்புரையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் சட்டத்தின் சமமான பாதுகாப்புக்கான அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது.
நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான குழாமில், நீதியரசர்களான கலாநிதி சோபித ராஜகருணா மற்றும் சம்பத் கே.பி. விஜேரத்ன ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
நசீமின் முன்னாள் மனைவி அஹமட் ஜலீல் ஃபர்மில்லா பேகம் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். 29 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலம் சிறையில் இருந்த பின்னர் நசீம் விடுதலை செய்யப்பட்டதை அவர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தியிருந்தார்.
பராமரிப்புத் தொகையைச் செலுத்துமாறு குவாசி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றத் தவறியதால், 2024 ஜூலை மாதம் நசீம் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், கைதிகள் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் கீழ், அதே ஆண்டு செப்டெம்பர் 12ஆம் திகதி அவர் விடுதலை செய்யப்பட்டார்.
நசீமின் சிறைவாசம் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறியதன் காரணமாகப் பதிவுசெய்யப்பட்டிருந்ததால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாகவும், இதேபோன்ற பராமரிப்புத் தொகை நிலுவை தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்ட மற்றொரு கைதிக்கு ஒரு வாரம் மட்டுமே தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இரு கைதிகளுக்கும் வழங்கப்பட்ட சிறை அனுப்புதல் ஆணைகளில் பயன்படுத்தப்பட்ட சொற்களில் காணப்பட்ட வேறுபாடு, இவ்வாறான சமமற்ற நடத்தைக்கு நியாயமான காரணமாக அமையாது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோர் மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நசீமுக்கு வழங்கப்பட்ட தண்டனைக் குறைப்பு செல்லாது என அறிவிக்கப்பட்டதுடன், அவருக்கு விதிக்கப்பட்ட அசல் சிறைத்தண்டனையின் சட்டபூர்வமான நிலையும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தண்டனை தொடர்ந்து சட்டரீதியாக அமுலில் இருந்தபோதும் நசீம் விடுதலை செய்யப்பட்டுள்ளதால், அவர் தற்போது “சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியோடியவர்” என நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அவர் உடனடியாகச் சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் முன்னர் பிறப்பிக்கப்பட்ட சிறை அனுப்புதல் ஆணை தொடர்ந்து செல்லுபடியாகும் எனவும், நசீமை மீண்டும் தடுத்து வைத்து தண்டனையை அமுல்படுத்துவதற்கு அந்த ஆணை போதுமான சட்ட அதிகாரத்தை வழங்குவதாகவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனினும், தண்டனையை அமுல்படுத்துவதற்காக உயர் நீதிமன்றம் மேலதிக உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அதிகாரம் ஏற்கனவே சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு இருப்பதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, தொடர்புடைய அனைத்து சூழ்நிலைகளையும் கருத்திற்கொண்டு சட்டத்திற்கு அமைவாகச் செயற்படும் பட்சத்தில், ஜனாதிபதி புதிதாகத் தண்டனைக் குறைப்பு வழங்குவதற்குத் தடை இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பு அடிப்படை உரிமைகள் மனு இலக்கம் 319/2024 தொடர்பில் வழங்கப்பட்டுள்ளது.
