இலங்கையின் ஜா-எல, யக்கடுவ – வெலிகடுவ வீதியின் இருபுறங்களிலும் அமைந்துள்ள மழைநீரால் நிரம்பிய வயல்வெளியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (27) மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏகல, பன்சல வீதி பகுதியில் வசித்து வந்த 35 வயதுடைய மாரசிங்க பெட்டிகே சஜித்த பிரியங்கர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, உயிரிழந்தவரின் தாயார் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில், தனது மகன் கடந்த 26ஆம் திகதி இரவு வீட்டிற்கு வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மறுநாள் அவரைத் தேடிச் சென்றபோது, வயல்வெளியில் முகம் குப்புற விழுந்த நிலையில் நீரில் மூழ்கியிருந்ததைக் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடும் மழை காரணமாக ஜா-எல பகுதியில் பல வீதிகளும் வயல்வெளிகளும் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
