யானைகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவங்கள் தொடர்பான 10 வழக்குகள் அனுராதபுரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களில் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
பரண, ரேவத, சுமேத மற்றும் தீகதந்து ஆகிய தந்தங்களைக் கொண்ட யானைகள் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பான நான்கு வழக்குகள் கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகளால் ‘டொலர் மெஷின்’ என அழைக்கப்பட்ட யுனிகோர்ன் என்ற தந்தங்களைக் கொண்ட யானை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
அத்துடன், மற்றுமொரு யானையுடன் மோதலில் ஈடுபட்டு மயங்கி விழுந்த மகேஷாக்ய என்ற யானையின் தந்தங்கள் கோடரியால் வெட்டப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு கெபிதிகொல்லேவ நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. தந்தங்கள் வெட்டப்பட்ட பின்னரே அந்த யானை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தீப்பந்தங்களால் சுட்டெரிக்கப்பட்டு காட்டு யானை ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு அனுராதபுரம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பத்திய என்ற தந்தங்களைக் கொண்ட யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு மஹவ நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
இதேவேளை, கல் கமுவே தலப்பூட்டுவா என அழைக்கப்பட்ட தந்தங்களைக் கொண்ட யானையின் மரணம் தொடர்பான வழக்கு குருநாகல் மாகாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய காவந்திஸ்ஸ என்ற யானை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான இரண்டு வழக்குகள் கல் கமுவ மற்றும் மஹவ நீதவான் நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
