அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் சுமார் 14 இலட்சம் பேருக்கான நலன்புரிப் பலன்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் வியாழக்கிழமை (29) நடைபெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது 12 இலட்சத்து 6 ஆயிரம் பேர் அஸ்வெசும நலன்புரிப் பலன்களைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், 14 இலட்சம் பேருக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் தவறானவை எனத் தெளிவுபடுத்தினார்.
பயனாளிகளை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இதன் காரணமாக தற்போதைய பயனாளிகளின் எண்ணிக்கையில் குறைப்பு ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
முதற்கட்ட மீளாய்வின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 9 இலட்சத்து 91 ஆயிரம் பயனாளிகளைக் கொண்ட பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது சுமார் 9 இலட்சத்து 89 ஆயிரம் பேர் இக்கட்டத்தின் கீழ் நலன்புரிப் பலன்களைப் பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் புதிய பட்டியலில் பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,000 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத்தின் கீழ் உள்ளடங்கும் சுமார் 2 இலட்சத்து 15 ஆயிரம் பயனாளிகளுக்கான மீளாய்வு அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ளது. அதுவரை அவர்களுக்கான கொடுப்பனவுகள் எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
மேலும், முதற்கட்டத்தின் கீழ் சுமார் 7 இலட்சத்து 40 ஆயிரம் பயனாளிகள் இன்னும் மீளாய்வு செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்து மீளாய்வு நடவடிக்கைகளும் நிறைவடைந்த பின்னர் அஸ்வெசும பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை குறைவடையாமல் அதிகரிப்பதற்கே வாய்ப்புள்ளதாகவும், நலன்புரிக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
