இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று (2) இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தைத் தொடர்ந்து வானளாவிய தீப்பிழம்புகள் எழுந்ததுடன், கரும்புகை பெருமளவில் வானில் பரவியுள்ளது. வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீ விபத்து ஏற்பட்டதும், நிலையத்தின் தீயணைப்புப் பிரிவினரும் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்களும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம், சேத விபரங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
