பின்லாந்தைச் சேர்ந்த 40 வயதான குத்துச்சண்டை வீரர் பெக்கா லூடெஸ்லாம்பி (Pekka Luodeslampi), தனது நரம்பியல் குறைபாட்டையும் விடாமுயற்சியால் தனித்துவமான திறமையாக மாற்றி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
மத்திய நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு டூரெட்ஸ் சிண்ட்ரோம் (Tourette Syndrome) உள்ளிட்ட பாதிப்புகள் காணப்படுகின்றன.
இருப்பினும், குத்துச்சண்டை மற்றும் உடல் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு தனது எதிர்வினை வேகத்தை அபாரமாக வளர்த்துக்கொண்ட இவர், 2020ஆம் ஆண்டு மே மாதம் வெறும் 0.186 விநாடிகளில் குத்துவிடும் எதிர்வினை வேகத்தைப் பதிவு செய்து உலக சாதனை படைத்தார்.
இதுமட்டுமன்றி, மூன்று நிமிடங்களில் 209 முழு நீட்டிப்பு குத்துகளை வழங்குதல் உள்ளிட்ட மேலும் நான்கு கின்னஸ் சாதனைகளையும் தன்வசப்படுத்தியுள்ளார்.
தனது உடல் குறைபாடுகளைத் தடையாகக் கருதாமல், அவற்றைத் தனது திறமையை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பாக மாற்றியுள்ளதாகக் கூறும் பெக்கா, தன்னைப் போன்ற சவால்களை எதிர்கொள்பவர்களுக்கும் விடாமுயற்சியுடன் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையைத் தனது சாதனைகள் மூலம் ஏற்படுத்தி வருகிறார்.
