மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை 100 வீதமாக அதிகரித்து வழங்கியிருப்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாத்திரமே என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (5) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மஹாபொல புலமைப்பரிசில் திட்டம் 1982ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், 2024ஆம் ஆண்டு வரை மாதாந்தக் கொடுப்பனவாக 5,000 ரூபா வழங்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்தார்.
42 ஆண்டுகளுக்குப் பின்னர், 2025ஆம் ஆண்டு தமது அரசாங்கம் அந்தக் கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரித்ததுடன், அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தையும் தற்போதைய அரசாங்கம் உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், இந்த ஆண்டும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மேலும் 30 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
