பாணந்துறை பகுதியில் வைத்தியர் ஒருவர், அந்த பகுதியில் வசித்து வந்த தனியார் வங்கி அதிகாரி ஒருவரின் வீட்டுக்கு தீ வைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, நேற்று வெள்ளிக்கிழமை (22) பிணையில் விடுவிக்கப்பட்டதாகப் பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை, சிரில் ஜான்ஸ் மாவத்தையில் வசிக்கும் தனியார் வங்கி அதிகாரி ஒருவர், தனது வீட்டுக்கு இந்த வைத்தியர் தீ வைத்துள்ளதாகப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே வைத்தியரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட வங்கி அதிகாரி வழங்கிய முறைப்பாட்டின்படி, கடந்த மே மாதம் 09ஆம் திகதி அதிகாலை 4.05 மணியளவில், சந்தேக நபரான வைத்தியர், கையில் பந்தம் ஒன்றையும் எரிபொருள் அடங்கிய கேன் ஒன்றையும் எடுத்துக்கொண்டு வங்கியாளரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
அங்கு பெற்றோலைப் பயன்படுத்தி வீட்டில் இருந்த சிசிரிவி கெமராவுக்கு அவர் தீ வைத்துள்ளார். கெமரா மீது பற்றிய தீ, பின்னர் வீடு முழுவதும் பரவியுள்ளது.
