மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் உள்ள விடுதியின் அறையொன்றில் தங்கியிருந்த இரு குழந்தைகள் புதன்கிழமை (27) மாலையில் மெத்தை தீப்பற்றி எரிந்ததில், இரு குழந்தைகளும் மூச்சு திணறி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், குறித்த தந்தையாரின் அடையாள அட்டையை விசேட புலனாய்வு பிரிவினர் பரிசோதனை செய்த போது, குறித்த அடையாள அட்டைக்கு சொந்தமானவர் பதுளையில் இருப்பதாகவும், அவருடைய பழைய அடையாள அட்டை 2023ம் ஆண்டு தொலைந்து போயுள்ள நிலையில் அவர் சட்டரீதியாக புதிய அடையாள அட்டை பெற்று தற்போது கடவத்தையில் வசித்து வருகின்றார் எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த குழந்தைகளின் தந்தையான 31 வயதுடைய மன கொடவத்த, பரடுவ, அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த எனவும், குவண்டா ஹண்டி சுபுன் எரண்ட சில்வா என்பதே அவரது உண்மையான பெயர் என்பதையும், விசேட புலனாய்வு பிரிவினர் விசாரணை மூலம் கண்டறிந்து பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.
மேலும் இந்த நபர், மனைவி புற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொய்களை கூறி இரு குழந்தைகளையும் ஆலயங்கள், பள்ளிவாசல்கள், பொது இடங்கள் என மாவட்டம் மாவட்டமாக கொண்டு சென்று பிச்சை எடுத்து வந்துள்ள நிலையில், அவர் மட்டக்களப்புக்கு கடந்த 20 ம் திகதி குறித்த விடுதியில் மனைவி காத்தான்குடி வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரை பார்க்க வந்துள்ளதாகவும் கூறி அந்த விடுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து கொண்டு இரு குழந்தைகளுடனும் தங்கியுள்ளார்.
அதன் பின்னர் மனைவியை காத்தான்குடி வைத்தியசாலைக்கு போய் பார்த்து விட்டு வருவதாக குழந்தைகளுடன் வெளியேறி , அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு சென்று மனைவிக்கு புற்றுநோய் என பிச்சை எடுத்து வந்துள்ளதாகவும், சம்பவ தினம் பிற்பகல் 2.00 மணிக்கு குழந்தைகளை அறையில் வைத்து பூட்டிவிட்டு மாடியின் கீழ் தரையில் உள்ள மது விற்பனை நிலையத்தில் சென்று மது அருந்திவிட்டு சுமார் 2 மணித்தியாலத்தின் பின்னர் அறைக்கு சென்ற போது, அறை தீ பற்றி இரு குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் குறித்த நபரின் மனைவி மாத்தறையில் வசித்துவருவதாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
அத்துடன் குறித்த சந்தேக நபர், கடந்த 2021.03.10 அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் இவர் கைது செய்யப்பட்டதுடன் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் படாததால் விடுவிக்கப்பட்டு, பின்னர் 2022.03.21 சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 2022.09.10 சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பிடியாணை மற்றும் அனுராதபுரம், கொழும்பு போன்ற பல பிரதேசங்களில் குழந்தைகளை வைத்து பண மோசடி செய்துள்ளதாகவும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இவ்வாறு பல பொய்களை கூறி குழந்தைகளை வைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ள குறித்த நபரை நேற்று வியாழக்கிழமை (28) இரவு போலீசார் கைது செய்துள்ளதுடன், குழந்தைகளின் தயார் வரவழைக்கப்பட்டுள்ளார்
இது தொடர்பாக மட்டுதலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
