ஹொரணை மக்கள் வங்கியின் ATM இயந்திரத்திற்கு பணம் நிரப்புவதற்காக கொண்டுசெல்லப்பட்டு 35 மில்லியன் ரூபா பணம் இனம்தெரியாத நபரொருவரால் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் புதன்கிழமை (3) பிற்பகல் ஹொரணை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புதன்கிழமை (3) பிற்பகல் 2.55 மணியளவில், மக்கள் வங்கியின் ஊழியர் ஒருவர் இரண்டு பணப்பைகளைத் தனது இரு கைகளிலும் கொண்டு சென்றுக் கொண்டிருந்த போது வங்கியின் பின்புறமாக இருந்த கதவின் ஊடாக வெளியே எடுத்துச் சென்றுள்ளார். இதன்போது அங்கு வந்த நபரொருவர், ஊழியரிடமிருந்த இரண்டு பணப்பைகளையும் பலவந்தமாகப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
இவ்வாறு திருடப்பட்ட பணம், வங்கியின் ஏ.டி.எம் இயந்திரங்களில் வைப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்ட பணம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பணத்தை திருடி சென்ற சந்தேகநபர் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில், ஹொரணை பொலிஸார் இக்கொள்ளைச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
