சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில் காலத்தை இழுத்தடித்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கை கண்டித்து, நீதிமன்றம் குறுகிய காலத்தில் இறுதி அறிக்கையை வழங்க வேண்டும் என்று பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சாண்டில்யன் வைஷாலி என்ற சிறுமி காய்ச்சல் மற்றும் தோலில் ஏற்பட்ட தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இதன் போது அவருக்கு மணிக்கட்டில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது ஓர் இரு நாட்களில் மணிக்கட்டு வீக்கம் அடைந்து பின்னர் அந்தப் பகுதி வெட்டி அகற்றப்பட்டது.
இந்த விடயத்தில் மருத்துவ தவறு இடம்பெற்றுள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியதுடன் பல்வேறு தரப்பினரிடம் தமக்கான நீதியையும் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் மேலதிக நீதவான் நஜ்மீ ஹுசைன் முன்னிலையில் நேற்று (3) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் கடந்த தவணையில் வழக்கு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஒன்றை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளோம் எனவும், எனவே அவரின் ஆலோசனையை பெறுவதற்கான நீண்ட கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்க வேண்டும் எனவும் பொலிஸார் நீதிமன்றில் கோரி இருந்தனர்.
ஏற்கனவே இந்த வழக்கு இரண்டு வருடங்கள் கடந்து விட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி நீண்ட தவணையை வழங்க மறுத்து, சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்கான கால அவகாசத்தின் பொருட்டு நேற்று வரை வழக்கை நீதவான் தவணையிட்டார்.
நேற்று (3) இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது, வழக்கு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை இதுவரை சட்டமா அதிபருக்கு அனுப்பப்படவில்லை என்றும், கொழும்பில் உள்ள சட்டக் கல்லூரி ஊடாக இனிமேல் தான் சட்டமா அதிபருக்கு விசாரணை அறிக்கை அனுப்பப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி சார்பாக நீதிமன்றில் முன்னிலையாக இருந்த சட்டத்தரணி எஸ் கே.புரந்தரன், மன்றை பொலிஸார் தவறாக நடத்துகின்றனர் என்றும், வழக்கை காலம் தாழ்த்தி கொண்டு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதிக்க கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார்.
கடந்த வழக்கு தவணையில் முழுமையான விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறி, நீண்ட தவணை கோரி, பொலிஸார் தற்போது விசாரணை அறிக்கை இதுவரையில் அனுப்பப்படவில்லை என்று குறிப்பிடுவதையும் சுட்டிக்காட்டினார்.
சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்கு நீதிமன்றம் ஒரு கால எல்லையை பொலிஸாருக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை முன்வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதவான் இந்த வழக்கில் பொலிஸாரின் போக்கை கடுமையாக கண்டித்தார். இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்து மாறுபட்ட தகவல்களையே தெரிவித்து வருகின்றனர்.
வழக்கு தொடுநர் தரப்பான பொலிஸ் தரப்பில் இருந்து ஒவ்வொரு வழக்கு தவணையின் போதும் மேலதிக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் செயற்பாடுகள் காலத்தை இழுத்தடிப்பு செய்து நீதிமன்றத்தில் நேரத்தை வீணாக்குவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு குந்தகம் விளைவிப்பதாகவும் அமைந்திருக்கின்றது. எனவே விரைவில் யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகம் குறுகிய காலத்தில் இல்லாவிட்டால் அடுத்த தவணையில் முழுமையான அறிக்கையை வழங்க வேண்டும். நீதிமன்ற வழக்கு குறிப்பேடுகளை வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்ப வேண்டும் என்று நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
