தெற்காசியாவின் துறைமுகங்கள் உலகளாவிய வணிகத்தின் பிரதான மையங்களாக விளங்குவதுடன், அவை அமெரிக்க நிறுவனங்களுக்குப் பாரிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதோடு பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதாக அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான மூலோபாய நிபுணர் எஸ். போல் கபூர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியப் பெருங்கடல் துறைமுகங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி மீதான அமெரிக்காவின் பார்வை என்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தெற்காசியத் துறைமுகங்களுடன் அமெரிக்க வணிகங்கள் எவ்வாறு இணைந்து செயல்படலாம் மற்றும் நம்பகமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வெளிப்படையான, உயர்தர உள்கட்டமைப்பு மேம்பாட்டை எவ்வாறு எளிதாக்கலாம் என்பது குறித்து இந்த மாநாட்டில் ஆராயப்பட்டது.
கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்திக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம் ஏற்கனவே 553 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது.
இன்றைய நவீன கடல்சார் வணிகத்தில் துறைமுகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் இணையப் பாதுகாப்பு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. நம்பகமான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து அமெரிக்க பேரவையில் பேசப்பட்டமையானது, துறைமுகக் கட்டுப்பாட்டு அமைப்புகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளடங்கிய குவாட் கூட்டமைப்பு இந்தியப் பெருங்கடலில் சுதந்திரமான மற்றும் திறந்த கடல்சார் போக்குவரத்தை வலியுறுத்தி வரும் நிலையில், இலங்கையின் துறைமுகக் கட்டமைப்புக்குள் அமெரிக்க முதலீடுகள் அதிகரிப்பது பிராந்திய இராஜதந்திர சமநிலையைப் பேண உதவும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
