உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என கொழும்பு பேராயத்தின் செய்தித் தொடர்பாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் அறிந்துகொள்ளும் உரிமை கொண்டவர்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் விசாரணை நடவடிக்கைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தாக்குதல்கள் அரசியல் சதியுடன் தொடர்புடையதா, அதனை முன்னெடுத்தவர்களை வழிநடத்தியது யார் என்பதையும் வெளிக்கொணர வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற்று வரும் விசாரணைகளில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே முன்னாள் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதாகவும் அருட்தந்தை சிரில் காமினி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலே இதுவரை உணவோ நீரோ உட்கொள்ளவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவரை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தனது கணவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
