அநுராதபுரம் நகரிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் காலாவதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆறு வைத்தியசாலைகளுக்கு மொத்தமாக ரூ.6 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கமைய, நுகர்வோர் அதிகாரசபையின் பிராந்திய சுற்றிவளைப்பு அதிகாரிகள் நகரிலுள்ள பல தனியார் வைத்தியசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, ஆறு வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் காலாவதியான பரிசோதனை உபகரணங்கள் மற்றும் மருந்துகள் பயன்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இதையடுத்து, நுகர்வோர் அதிகாரசபை அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆறு வைத்தியசாலைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது.
வழக்கை விசாரித்த அநுராதபுரம் இலக்கம் 2 நீதவான் நீதிமன்றம், ஒவ்வொரு வைத்தியசாலைக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம், மொத்தமாக ஆறு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
