2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் எப்.யூ. வூட்லர், உயிரிழந்தவர்களில் 113 ஆண்களும் 9 பெண்களும் அடங்குவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், 2024 ஆம் ஆண்டில் 510 ஆண்கள் மற்றும் 85 பெண்கள் உட்பட மொத்தம் 595 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், 2025 ஆம் ஆண்டில் 309 ஆண்கள் மற்றும் 67 பெண்கள் உட்பட 376 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, 2024 முதல் 2026 வரை மொத்தமாக 1,093 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் கணிசமானோர் இளைஞர்கள் எனவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
வரவிருக்கும் பொசன் பண்டிகை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை முன்னிட்டு, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லும் போது பெற்றோர்களும் பெரியோர்களும் அதிக அவதானத்துடன் கண்காணிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
