இறக்குமதி பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மேலும் திறமையாகக் கண்காணிக்கும் நோக்கில் அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, இறக்குமதி பரிவர்த்தனைகளுக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கொடுப்பனவிற்கும் வங்கிகள் தனித்துவமான சிறப்புப் பரிவர்த்தனை எண்ணை வழங்க வேண்டும்.
மேலும், அந்தப் பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து தகவல்களும் இலங்கைச் சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இறக்குமதியாளரின் வரி அடையாள எண் (TIN), முகவரி, பயனாளர் விவரங்கள், வங்கி மற்றும் கிளைக் குறியீடுகள், கொடுப்பனவுத் தொகை, நாணய வகை, கொடுப்பனவு மற்றும் விநியோக நிபந்தனைகள், கொடுப்பனவு செய்யப்பட்ட திகதி, தற்காலிக விலைப்பட்டியல் இலக்கம் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் சுங்கத் திணைக்களத்துக்கு வங்கிகள் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அதேவேளை, பொருட்களை இறக்குமதி செய்வதற்கான முற்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன், இறக்குமதியாளர்கள் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளர்களாக பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவு செய்யாத இறக்குமதியாளர்களுக்கு வர்த்தக வங்கிகள் வழியாக முற்கொடுப்பனவுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படாது என புதிய ஒழுங்குமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
