நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சமூக ஊடகங்கள் மற்றும் பல்வேறு தகவல் தொடர்பு ஊடகங்கள் ஊடாக பெண்களை இலக்கு வைத்து, அவர்களை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தும் மற்றும் சொத்துக்களைப் பறிக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாகப் பதிவாகியுள்ளமையினால், இது தொடர்பாக பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.
பல்வேறு உணவு மற்றும் பானங்களை உட்கொள்ளச் செய்து, பெண்களை போதைக்குள்ளாக்குதல் அல்லது சுயநினைவிழக்கச் செய்தல் போன்ற செயல்களின் மூலம் அவர்களைத் துஷ்பிரயோகம் செய்வதுடன், அவர்களின் சொத்துக்களைத் திருடும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோல், ஏமாற்றுக்கார நபர்கள் திருமணப் பொய் வாக்குறுதிகளை வழங்கி, பெண்களை ஏமாற்றி அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, பின்னர் பணம் மற்றும் சொத்துக்களைப் பறித்துக் கொள்வதுடன், இறுதியில் அவை கொலையில் முடிவடைந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களும் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, இந்தச் சம்பவங்கள் குறித்து அவதானம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் பொலிஸார் பல விசேட விடயங்களைச் சுட்டிக்காட்டி பொதுமக்களை விழிப்புணர்வூட்டியுள்ளனர்.
