கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வரலாற்றில் முதன்முறையாகவும், இலங்கையின் அரச வைத்தியசாலைகளில் தற்போது கிளிநொச்சியில் மட்டுமே நடைமுறைக்கு வந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த செயற்கை முறை கருக்கட்டல் (IVF) சிகிச்சை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் நிறுவப்பட்ட வடக்கு மாகாண விசேட மகப்பேறு மற்றும் பெண்நோயியல் மருத்துவமனையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கம் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளன.
திருமணத்திற்குப் பின்னரும் குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கிளிநொச்சியில் IVF சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட நான்கு பெண்களுக்கு இச்சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. உடல் மற்றும் உளநல தகுதிகளை பூர்த்தி செய்த பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், சிகிச்சை முழுமையாக இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரச வைத்தியசாலைகளில் தற்போது கிளிநொச்சி மாவட்ட அரச வைத்தியசாலையில் மட்டுமே இந்த செயற்கை முறை கருக்கட்டல் (IVF) சிகிச்சை இடம்பெற்று வருவது சிறப்பம்சமாகும்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி, வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிரதி செயலாளர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் நோயாளர் நலன்புரிச் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
