நாட்டில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேலும் திறம்படவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்காக, “வர்த்தகத்திற்கான தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு” இந்த ஜூலை மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், “முதலீட்டிற்கான தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு” இந்த வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளார்.
டொலர் வருமானத்தை அதிகரித்து பலமான ஏற்றுமதிப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக, ஆடைத் துறையின் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்து ஆராயும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் முன்னணி ஆடைத் துறை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்துகொண்ட இந்த கலந்துரையாடலில், ஆடைத் துறை எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் புதிய ஏற்றுமதித் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான எதிர்காலக் கொள்கைத் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.
கைத்தொழிற்சாலைகளை கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என மேலும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதற்காக ஒன்றிணையுமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இதற்காகத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கைத்தொழிற்சாலைக் கட்டடங்களை அரசாங்கத்தின் அனுசரணையுடன் வழங்குவதற்கான “Plug and Play” முறைமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கிய ஜனாதிபதி, ரூபாயில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அதிகரித்த போதிலும், இதனால் டொலருக்கு ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு டொலர் ஈட்டும் வழிகளை வலுப்படுத்துவது அத்தியாவசியமானது எனச் சுட்டிக்காட்டினார்.
