டெங்கு நோய் பரவல் நிலைமை தொடர்பாக டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர வெளியிட்ட கருத்துக்களே உண்மையானவை.
சுகாதார அமைச்சரோ அல்லது பிரதி அமைச்சரோ கூறும் கருத்துக்கள் யதார்த்தத்துக்குப் புறம்பானவை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொரளையில் உள்ள சுகாதார நிபுணர்களின் தேசிய இயக்கத்தில் நேற்று வியாழக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுகாதார அமைச்சரும் பிரதி அமைச்சரும் இந்த நிலைமையின் தீவிரத்தன்மையைக் கருத்திற் கொள்ளாது, வைத்தியசாலைகளின் மூலம் இதனைப் பராமரிக்க முடியும் எனவும் பாரிய நெருக்கடி எதுவும் இல்லை எனவும் தொடர்ந்தும் கூறிவருகின்றனர்.
ஆனால், அவர்களின் கூற்றுக்கு முற்றிலும் மாறான ஒரு கருத்தையே டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர ஊடகங்களுக்கு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
இந்த நோய்பரவல் நிலைமை வைத்தியசாலைகளின் கொள்ளளவையும் தாண்டிச் செல்வதாகவும், சுகாதார ஊழியர்களால் கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலையை நோக்கி நகரும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனால் மக்கள் மத்தியில் உண்மை நிலை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. நாம் டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளரின் கூற்றையே உண்மையானதாகக் கருதுகின்றோம். ஏனெனில் முதன்மை மருத்துவமனைகளில் நோயாளர்கள் அனுமதிக்கப்படும் வீதம், வசதிகள் மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறை என்பன தற்போது தாங்கிக்கொள்ள முடியாத எல்லையைத் தாண்டியுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய டெங்கு கண்காணிப்பு அமைப்பின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஆண்டின் 54 வார காலப்பகுதியையும் ஒப்பிடுகையில், வாராந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1000 க்கும் குறைவாகவே காணப்பட்டது.
ஆனால், நடப்பு 2026 ஆம் ஆண்டின் 21 ஆவது வாரத்திலிருந்து 24 ஆவது வாரமளவிலான மே மற்றும் ஜூன் மாத காலப்பகுதியில் இந்நிலைமை சற்றும் எதிர்பாராத வகையில் மிகத் தீவிரமான உச்சத்தை எட்டியுள்ளது.
குறிப்பாக 24 ஆவது வாரத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை 5000 இற்கு நெருக்கமாக மிகச் சீற்றமாக உயர்ந்துள்ளதுடன் தற்போது நாளொன்றுக்கு பதிவாகும் உத்தியோகபூர்வ நோயாளர்களின் எண்ணிக்கையே 1000 ஐத் தாண்டியுள்ளது.
தற்போது உத்தியோகபூர்வமாக சுமார் 10,000 நோயாளர்களும், 30 மரணங்களும் பதிவாகியுள்ள போதிலும், அரசாங்கப் பட்டியலில் உள்வாங்கப்படாத தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகப் பரிசோதனைத் தரவுகளை ஒப்பிடுகையில், கடந்த 6 மாதங்களில் உண்மையான நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 முதல் 80,000 வரை மிக உயர்வாக இருக்கக்கூடும்.
அரசாங்கத்தின் பலவீனமான செயல்பாடுகள் மற்றும் அரசியல் தலையீடுகள் காரணமாக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தோல்வியடைந்துள்ளதோடு, மேல் மாகாணத்தில் கொழும்பு, மஹரகம, தெஹிவளை – கல்கிஸ்ஸ உள்ளிட்ட பிரதான மாநகர சபைகளில் கழிவகற்றல் முறையானது முற்றாக முடங்கியுள்ளது.
அத்துடன் கொழும்பு, கண்டி, கராப்பிட்டிய ஆகிய தேசிய வைத்தியசாலைகளில் கூட நோயாளர்கள் இரத்தப் பரிசோதனைகளை வெளியில் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதோடு, வைத்தியசாலைகளின் கொள்ளளவும் ஊழியர்களின் பற்றாக்குறையும் தாங்கிக்கொள்ள முடியாத எல்லையைத் தாண்டியுள்ளது.
எனவே, இந்த நிலைமை ஒரு கொடிய பெருந்தொற்றாக மாறுவதற்கு முன்னர் நாட்டில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரை உள்ளடக்கிய தற்போதைய அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
